முகவுரை

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் ஏழாவது தொகுபின் இரண்டாவது பகுதியாகிய இவ்விதழை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு செய்கிறது. அறையாண்டிதழாக வெளியீடு காணும் இவ்விதழில் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆய்வு என்பது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாய்வேடு அதனை முன்னிருத்தி உருவாக்கம் கண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்து ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

               

                ‘சித்த இலக்கியத்தில் இரசவாதம்’ எனும் தலைப்பிலான முனைவர் ல.புஷ்பலதா (இந்தியா) அவர்களின் கட்டுரையானது சித்தர் இலக்கியங்களில் இரசவாதம் குறித்த தகவல்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பதனை விளக்குன்றன. கட்டுரையாளர் சித்தர் இலக்கியங்களில் கணப்படும் இரசவாதம் எவ்வாறு நோய்களுக்கான மருந்தாகவும் இளமையாக இருப்பதற்கான வழியாகவும் உள்ளது என்பதனை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். இக்கட்டுரையில் இரசவாதம் குறித்த  தொடக்க கால தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து இணைப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல் (மலேசியா) அவர்களின் ‘பேரா மாநிலத் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் திருநெல்வேலித் தமிழ்க் கிறிஸ்தவர்களின் பங்கு’ எனும் கட்டுரையானது மலேசிய நாட்டின் பேராக் மாநிலத்தில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியில் திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழ்க் கிருத்துவர்கள் எவ்வாறெல்லாம் பங்களிப்பும் சேவையும் செய்துள்ளனர் என்பதனை ஆய்வுப் பூர்வமாக விளக்குவதாக வரையப்பட்டுள்ளது.

 

            இவ்வாய்விதழில் மூன்றாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ள ‘திருவள்ளுவரின் பிறப்பு, பிறந்த இடம் மற்றும் மறைவு வரையிலான ஆய்வு க.அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு ஒளியில்’ எனும் கௌதம சன்னா (இந்தியா) அவர்களின் கட்டுரையானது திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களைப் புதிய பார்வையில் இதுவரை வெளிவந்துள்ள தகவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்துள்ளது. இக்கட்டுரையில் பெறப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் யாவும் கல்வெட்டுகள் மற்றும் ஆய்வு நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் வழி நிறுவப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுத் தளத்தினை உருவாக்கியவர் பண்டிதர்.க.அயோத்திதாசர் எனும் முன்னோடி அறிஞர். இப்பண்டிதரின் ஆய்வுகளைப் பின்பற்றி திருவள்ளுவரின்  பிறப்பு, பிறந்த இடம் மற்றும் மறைவு வரையிலான ஆய்வு எனும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது. இதனை அடுத்து வரும் உமா அழகிரி (மொரீசியசு) அவர்களின் கட்டுரையானது மொரீசியசு நாட்டில் உள்ள தொடக்கநிலைப் பள்ளிகளில் பேச்சுத் திறனை அமல்படுத்துவதில் எத்தகைய சிக்கல்கள் உள்ளன என்பதனையும் அதனைத் தீர்ப்பதற்கான வழித்துறைகளையும் ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர், தொடக்கநிலைப் பள்ளிகளில் பேச்சுத் திறனை அமல்படுத்துவதில் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களிடத்தும் சிக்கல் நிலவுவதாகவும் இச்சிக்கலைக் களைய பேச்சுத் திறனை மாணவர்கள் விரும்பும் முறையில் அமல்படுத்துவது சிறந்த முறை எனக் கூறியுள்ளார்.

 

            இவ்வாய்விதழின் அடுத்த கட்டுரை இணைப்பேராசிரியர் முனைவர் செ.ஸ்டாலின் (இந்தியா) அவர்களின் ‘விடி-விடுகதை ஓர் ஆய்வு’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை ‘விடி’ மற்றும் ‘விடுகதை’ ஆகியவற்றின் மாறுபாட்டை விளக்குகிறது. பொதுவில் உடனுக்குடன் ஓரிரு சொல்லில் கேள்விகளாக கூறப்படுவது விடி எனப்படுகிறது. ஒரு கதையாகக் கூறப்பட்டால் அது விடுகதை என்ற வகையாகிறது. விடி / விடுகதைகளாவன இடத்திற்குத் தக்கவாறு மாறுபாடும் தனித்தன்மையும் உடையதாக உள்ளன. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் களஆய்வின் மூலம் அறியப்பட்ட  à®µà®¿à®Ÿà®¿ / விடுகதை ஆகிவற்றின்  à®¤à®©à®¿à®¤à¯à®¤à®©à¯à®®à¯ˆà®•à®³à¯ˆà®¯à¯à®®à¯ வேறுபாடுகளையும் இக்கட்டுரை விளக்குகிறது. தொடர்ந்து வருவது பார்வதி வெள்ளைச்சாமி மற்றும் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் (மலேசியா) ஆகியோரின் ‘நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் மகாகவி பாரதியாரின் அறிவார்ந்த சிந்தனைகள்’ எனும் கட்டுரையாகும். இக்கட்டுரையானது மகாகவி பாரதியாரின் கவிதைகள் எவ்வாறு நன்னெறிக் கல்வி கற்றல் கற்பித்தலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை விளக்கிகிறது.

           

            அடுத்தது, ‘தமிழர் மரபில் ஊழ்வினை’ எனும் தலைப்பிலான முனைவர் பெ.மோகன் (இந்தியா) அவர்களின் கட்டுரையாகும். இக்கட்டுரை தமிழர் பாரம்பரியத்தில் ஊழ்வினை குறித்த செய்திகளைத் தமிழ் இலக்கியத்தினை முன்னிருத்தி ஆய்வு செய்கிறது. இதற்காகப் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழர் வாழ்க்கையில் ஊழ்வினையின் முக்கியத்துவம் எத்தகையது என்பதனைக் கட்டுரையாளர் நன்கு நிறுவுகிறார். தொடர்ந்து முனைவர் ஜோதி எஸ். தேமொழி (அமெரிக்கா) அவர்களின் கட்டுரை புத்ததத்தரால் கிடைக்கப்பெறும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புகள் யாவை என்பதனை ஆய்வு செய்கிறது. இக்கட்டுரை புத்ததத்தரின் படைப்புகளில் இருந்து களப்பிர மன்னனாகிய அச்சுத விக்கிராந்தாவின் ஆட்சியைப் பற்றிய சில குறிப்புகளைத் தருகிறது. இதற்கு முந்தைய ஆய்வாளர்களின் ஆய்வுகளைக் கொண்டு சோழர் ஆட்சி காலமாகிய ஐந்தாம் நூற்றாண்டில் புத்ததத்தர் புத்தமங்கலம் எனும் இடத்தில் இருந்த போது அவர் படைத்த படைப்புகளையும் இக்கட்டுரை அடையாளம் கண்டுள்ளது.

 

            தொடர்ந்து வரும் கட்டுரையானது முனைவர் ச.கண்மணி கணேசன் (இந்தியா) அவர்களின் கட்டுரையானது ‘பண்டைத் தமிழகப் பரதவரிடம் திணை  மாந்தரிடம்  தோன்றிய சாதிப்பிரிவினை’ எனும் தலைப்பில்  கடலும் கடலைச் சார்ந்த நிலப்பரப்பாகிய நெய்தல் திணையில் வாழ்ந்த மக்களிடையே நிலவிய சாதிய அமைப்பைப் பற்றிப் பேசுகின்றது. இக்கட்டுரை பழங்காலத்துத் தமிழ் மக்களிடையே சாதிப்பிரிவு இல்லை என்பதாகக் கூறும் கருத்தை மறுப்பதற்கான தரவுகளையும் தகவல்களையும் முன்வைக்கிறது.

 

            அடுத்தது முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர்) அவர்களின் ‘சிங்கப்பூரில் குழந்தை / சிறுவர் இலக்கியச்சூழல்: நலிவும் நன்னிலை நோக்கிய நகர்வும்’ எனும் தலைப்பில் ஏழுதப்பட்டுள்ள இக்கட்டுரையானது, 1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு குழந்தை இலக்கியத்துறையின் வளர்ச்சியையும் இன்றைய நிலையை ஆய்வதோடு, அவை நலிவடைந்துள்ளமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை மீட்பதற்கான வழித்துறைகளையும் முன்வைக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் ‘உயிர்மெய்: வரலாற்றுநிலை-சமகாலநிலை’ எனும் தலைப்பிலான முனைவர் த.சத்தியராஜ் (இந்தியா) அவர்களின் கட்டுரையானது தமிழ் இலக்கணத்தில் உயிர்மெய் எழுத்தினை ஆய்வதாக உள்ளது. இக்கட்டுரை உயிர்மெய் எழுத்தின் தொடக்ககால வரலாற்றையும் அதன் பயன்பாட்டையும் ஆராய்வதோடு தற்காகப் பயன்பாட்டு நிலையையும் விளக்குகிறது.

 

            முனைவர்.க.சுபாஷிணி (ஜெர்மன்), ஆக்கத்தில் உருவான ‘ஜெர்மனி ஃப்ராங்கன் கல்வி நிறுவனத்தின் தமிழ் ஓலைச்சுவடி மற்றும் காகித ஆவணங்கள் கூறும் செய்திகள்’ எனும் கட்டுரை தமிப்பேராய்வு ஆய்விதழின் ஏழாவது தொகுதியின் இரண்டாவது பாகத்தில் அடுத்த கட்டுரையாக வருகின்றது. இக்கட்டுரையில், ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே நகரில் உள்ள ஃப்ராங்கன் கல்வி நிறுவனம் பாதுகாத்துள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் காகித ஆவணங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் அமைப்பு, கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்க்கை முறை முறைகளை ஆய்வு செய்து தமிழ்நாட்டின் வரலாற்றில் உள்ள இவற்றிற்கான இடைவெளிகளை நிரப்பும் பணியை ஆய்வின் கண்டுபிடிப்பாக முன்வைத்துள்ளது. இதனை அடுத்து வருவது “பாடத்திட்டப் பகுப்பாய்வு-தொடக்கப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்டம் 1957’ எனும் தலைப்பில் அமையப்பெற்ற க.சு.சங்கீதா (இந்தியா) அவர்களின் கட்டுரையாகும். இக்கட்டுரை 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களை ஆய்வு செய்கிறது. அடுத்த நிலையில் மாணவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தின் மூலங்களாக இந்த உள்ளடக்கங்களை எப்படி ஆக்ககரமாக மாற்றம் செய்து பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது.

 

            தொடர்ந்து வரும் ‘மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் கோயிலின் மகிமை’ எனும்
சர்மிளா சதாசிவம் மற்றும் முனைவர் சில்லாழி கந்தசாமி (மலேசியா) ஆகியோரின் கட்டுரையானது மலேசியாவின், பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மரத்தாண்டவர் கோயிலின் வரலாற்றையும் அதன் சிறப்புகளையும் விளக்குவதாக உள்ளது. இத்தொகுப்பில் இறுதிக் கட்டுரையாக வந்துள்ள ‘இமையம் படைப்புகளில் பெண்களின் நிலை ஒரு ஆய்வு’ எனும் படைப்பை முனைவர்.ஆர்.விஐயசாமுண்டீஸ்வரி மற்றும் மு.சரளாதேவி (இந்தியா) ஆகியோர் இணைந்து ஆக்கம் செய்துள்ளனர். இக்கட்டுரை இமையம் படைப்புகளில் பெண்ணியம் எவ்வாறு பேசப்படுகின்றது என்பதனை ஆய்வு செய்து முன்வைத்துள்ளது.

 

            இந்த ஆய்விதல், பல்வேறு ஆய்வாளர்களின் சிந்தனைகளைத் தொகுக்கும் பெறும் பணியில் முயன்றுள்ளது. பல அறிஞர்களின் சிறந்த ஆய்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ‘தமிழ்ப் பேராய்வு’, தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. பதிப்பாசிரியர் குழு இவ்வேளையில் இந்த ஏழாவது தமிழ்ப் பேராய்வின் இரண்டாவது பகுதியின் வெளியீட்டிற்கு துணை புரிந்த கட்டுரையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது. இத்தொகுப்பின் பதிப்புச் செலவை மனமுவந்து ஏற்றுக் கொண்ட அல்மா ஹெர்பல் நேச்சர் நிறுவணத்தில் தோற்றுனரும் தலைமை நிர்வாகியுமாகிய திருமிகு MGL. வேலாயுதம் அவர்களின் தாராள மனதை இவ்விடம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

 

பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன்
தலைமைப் பதிப்பாசிரியர்
20.12.2018