PREFACE IN TAMIL

முகவுரை

 

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் ஏழாவது தொகுப்பாக இவ்விதழை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு செய்கிறது. அறையாண்டிதழாக வெளியீடு காணும் இவ்விதழில் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆய்வு என்பது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாய்வேடு அதனை முன்னிருத்தி உருவாக்கம் கண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்து ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

            ‘கவிதை குறித்த முரசு விவாதங்கள்’, எனும் தலைப்பில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர்), அவர்களின் ஆய்வுக் கட்டுரையானது மரபுக் கவிதையாளர்களுக்கும், புதுக்கவிதையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற விவாதங்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது. இது போன்ற விவாதங்கள் 70-களில் தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தது. இக்கட்டுரை மலேசிய-சிங்கப்பூர் இளைய கவிஞர்கள் புதுக்கவிதையை வரவேற்கும் போக்கிலும், மரபுக் கவிஞர்கள் அதற்கு மாறாகவும் விளங்குவதை விளக்குகிறது. சிங்கப்பூரின் தமிழ்ப் புதுக்கவிதைத் தோற்றுனராகப் போற்றப்படும் இளங்கோவன், அவரைத் தொடர்ந்த KTM.இக்பால், VT.அரசு (தமிழ் முரசின் தலைமைப் பதிப்பாசிரியர்) போன்றோர் 1991-1992-களில் இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தனர். தற்போதைய கட்டுரை, இந்த விவாதத்தின் வழி சம்பந்தப்பட்ட கவிஞர்களின் எழுத்தாற்றல், விவாதத் திறன், இலக்கிய அறிவு ஆகியவற்றை மதிப்பீடு செய்துள்ளது. இவ்விவாதமானது சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்கு மறைமுகமாகப் பங்களித்துள்ளது என்பது ஆசிரியரின் கருத்து.

            அடுத்த கட்டுரை, பேராசிரியர் முனைவர். மு.இராசேந்திரன் (மலேசியா) மற்றும் துரை நாகராஜன் (இந்தியா) ஆகியோரின் ‘பழைய மலாய் இலக்கிய வளர்ச்சியில் இந்திய இலக்கியப் பாரம்பரியத்தின் பங்களிப்பு-ஓர் ஆய்வு’, என்பதாகும். இவ்வாய்வானது இந்திய இலக்கியப் பாரம்பரியம் பழைய மலாய் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளது என்பதை நிறுவும் முயற்சியாக உள்ளது. படைப்பாளர்கள் இக்கட்டுரையை வலுவான ஆதாரங்களைக் கொண்டு (கல்வெட்டுகள், தொடக்க கால வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியச் சான்றுகள்ம, சீனக் குறிப்புகள், அரேபிய குறிப்புகள் மற்றும் மலாய் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்) இக்கட்டுரையை வடிவமைத்துள்ளனர். இதன் வழி, தகுந்த ஆதாரங்களுடன் பழைய மலாய் இலக்கிய வளர்ச்சிக்கு இந்திய இலக்கியப் பாரம்பரியம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதனைத் தெளிவாக நிறுவியுள்ளனர்.

            இத்தொகுப்பின் மூன்றாவது கட்டுரை, ‘சங்க இலக்கியங்களில் காணப்பெறும் 'யாணர்' என்னும் சொல்லின் பொருள்: ஒரு மீள்பார்வை” எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு முனைவர் ந.அதியமான் மற்றும் முனைவர் த.கண்ணன் (இந்தியா) ஆகியோரால் படைக்கப்பட்டுள்ளது. ‘யாணன்’ எனும் இச்சொல்லுக்குப் 'புதிய வருவாய்' என்ற பொருள் விளக்கம் உரையாசிரியர்களின் உரைகளிலும் பின்னர் தொடர்ந்து வந்த பதிப்பாசிரியர்களின் உரைகளிலும் காணப்பெறுகிறது. 'புதிய வருவாய்' என்னும் இப்பொருளை ஏற்றுக் கொண்டால், தொடர்புடைய சங்க இலக்கியக் கவிதை வரிகளின் பொருள் பல இடங்களில் தெளிவைத் தருவதாக இல்லை. எனவே, இக்கட்டுரையில் ‘யாணர்’, எனும் வார்த்தைக்கு உரிய பொருளைக் காணும் வகையில் ஹெர்மனுதிக் (Hermeneutics) ஆய்வு நெறி துணை கொண்டு ஆசிரியர்கள் செய்துள்ள ஆய்வின் முடிவானது, இச்சொல்லுக்கு 'புதிது' அல்லது 'புதிய' எனப் பொருள் கொண்டால் கவிதைகளின் பொருள் தெளிவடையும் எகக் குறிப்பிடுகின்றனர். இதன் வழி, தமிழர் மரபு குறித்த புதிய பார்வை ஒன்று கிட்டும் என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

            தொடரும் ஆய்வுக் கட்டுரையை முனைவர் சுபாஷினி (ஜெர்மனி), ‘பண்டைய தமிழர்களின் கடல்வழிப்பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு’, எனும் தலைப்பில் படைத்துள்ளார். தொடக்க காலத் தமிழ்க் கடலோடிகளின் வரலாறும் குறிப்புகளும் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும். கட்டுரையாளரின் கருத்துப்படி தொடக்ககாலத் தமிழ்க் கடலோடிகளின் நடவடிக்கைகள் வெகு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டதாகவும், அது குறித்துப் போதுமான தகவல்கள்களும் தரவுகளும் பாதுகாக்க்கப்படாமையால் ஐரோப்பியர்களே இக்கடல் செலவுகளில் முன்னோடிகள் என ஆகிவிட்டதாகவும் கூறுகிறார். தொடர்ந்து பழைய தமிழ்க் கடலோடிகளே நீள்கடல் கடந்து புதிய நிலங்களை வெற்றி கொண்டு அனைத்துலக வியாபாரத்திற்கு வழியமைத்தனர் என உரிய ஆதாரங்களுடன் இவர் விளக்குகிறார். இக்கட்டுரையானது தமிழ்க் கடலோடிகள்தான் கடல் நடவடிக்கைகளைத் தொடக்கியவர்கள் எனும் கருத்தை முன்வைக்கிறது.

            ‘தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் தடயங்கள்’, எனும் ச.பாபு (இந்தியா) அவர்களின் கட்டுரை இத்தொகுப்பில் அடுத்து அமைந்துள்ளது. இக்கட்டுரையானது தமிழரின் வரலாற்றுக்குச் சில புதிய தரவுகளை இணைப்பதாக உள்ளது. கட்டுரையாளர், தமிழ் மக்கள் இலக்கியப் படைப்பாளர்களாகவும், வீரம் கொண்டவர்களாகவும், கலைகளில் சிறந்தவர்களாகவும் இருந்தனர் என்றும், தமிழ் மன்னர்கள் நெடுகடல் கடந்து சென்று போரிட்டு வெற்றிகண்டு தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். அவர்கள் விட்டுச் சென்ற பல தொல்லியல் தடயங்கள் தமிழ் நாட்டிலும், வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தொடக்ககாலத் தமிழர்களின் வரலாற்றுக் குறிப்புகள் ஆகும். இவற்றுக்கு மேலும் பல புதிய தரவுகளாக ஆய்வாளர் கண்டெடுத்துள்ள தொல்லியல் பொருள்கள் இருப்பதாக இக்கட்டுரை விவரிக்கின்றது.

            அடுத்து, ‘இந்தோனேசியாவிற்குத் தமிழர்களின் வருகையும் மேடானில் கம்போங் மெட்ராஸ் கிராமத்தின் தோற்றமும்’, எனும் இணைப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல் (மலேசியா), முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை (மலேசியா), முனைவர் கிங்ஷ்தன் பால்தம்புராஜ் (இந்தியா) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை, தமிழர்கள்  164 நாடுகளில் வாழ்வதாகவும், இவர்கள் உலகின் பல நாடுகளுக்குத் தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்தும் பல காலகட்டங்கள் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எனும் செய்தியை முன்வைக்கிறது. இவற்றுள் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றவர்களும் அடங்குவர். தொடக்கத்தில் பேரரசுகளின் தோற்றுனர்களாகவும், அனைத்துலக வியாபாரிகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில் பிரித்தானியர் ஆதிக்கத்தின் கீழ் 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் உடல் உழைப்புத் தொழிலாளிகளாக மலேசிய, சிங்கப்பூர், மொரீசியசு, பிஜி, தென்னாப்பிரிக்கா, மேடான் (இந்தோனிசியா) ஆகிய ஊர்களுக்குச் சென்றனர். இக்கட்டுரை, புலம் பெயர்ந்த தமிழர்கள் எனும் பார்வையில் இந்தோனிசியாவின் மேடான் பகுதியில் இருக்கும் கம்போங் மெட்ராஸ் எனும் இடத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வை ஆய்ந்துரைப்பதாக அமைகிறது.

            அடுத்து, ‘மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையில் சீனர்களின் நம்பிக்கைகளின் தாக்கம்’, எனும் கட்டுரையானது முனைவர் க.சில்லாழி, தமிழரசி முனியாண்டி, கிருஷ்ணவேனி சுப்பிரமணியம் (மலேசியா) ஆகியோரின் படைப்பாக அமைகின்றது.  இக்கட்டுரை மலேசிய இந்தியர்களின் பின்புலத்தையும், மலேசிய இந்தியத் தொடக்ககாலத் தொடர்புகளையும் விளக்கி அது போலவே மலேசியச் சீனர்களுக்கும் ஒரு வரலாறு இருப்பதையும் குறிப்பிடுகிறது. மலேசியா விடுதலை பெற்ற பிறகு இவ்விந்தியர்களும் சீனர்களும் மலேசியக் குடியுரிமை பெற்று இங்கேயே தங்கிவிட்டனர். சீனர்களோடு நீண்ட காலம் தொடர்பு கொண்டுள்ள மலேசிய இந்தியர்கள் சில சீனப் பண்பாட்டுத் தாக்கங்களுக்கும் உட்பட்டுள்ளமை இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மலேசிய இந்தியர்கள் பொருளியல் காரணத்தாலும், சில நம்பிக்கைகள் சார்ந்தும் சீனர்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தங்கள் வாழ்வில் அமல்படுத்துகின்றனர் என்பதை இக்கட்டுரை பகுப்பாய்ந்து முன்வைக்கின்றது.

            தொடர்ந்து, ‘கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம்’, எனும் தலைப்பிலான கட்டுரையை பிரேமநந்தினி தேமுடு, முனைவர் மோகனதாஸ் இராமசாமி (மலேசியா) ஆகியோர் படைத்துள்ளனர். கண்ணதாசனின் புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களின் துணை கொண்டு தமிழ் இலக்கணப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தக் கூடிய ஓர் உத்தியை முன்வைப்பதே  à®‡à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯à®°à¯ˆà®¯à®¿à®©à¯ முதன்மை நோக்கமாக உள்ளது. கட்டுரையாளர்கள் போதுமான தரவுகளையும் உதாரணங்களையும் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இருந்து தொகுத்துப் பகுப்பாய்வு செய்து இலக்கணப் போதனையில் இலக்கியக் கூறுகளையும் இணைத்து போதிப்பது சிறந்ததொரு பலனை மாணவர்களுக்கு அளிக்கும் எனும் கருத்தை நிறுவியுள்ளனர். 

            அடுத்து, ‘‘அம்மா’ கதையில் கணவனால் கொடுமைப் படுத்தப்பட்ட மனைவி’, எனும் தலைப்பிலான கட்டுரையை இராஜேஸ்வரி ஆறுமுகம் (மலேசியா) படைத்துள்ளனர். பெண்களின் நிலையை அடையாளம் காண்டு, அவர்களின் விடுதலைக்கான வழிவகைகளைக் கண்டறிதல் இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாக உள்ளது. பொதுவில் 25 வருடங்களில் 294 சிறுகதைகள் பேரவைக் கதைகள் எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளன. அவற்றுள் 43 சிறுகதைகள் பெண்ணியக் கோட்பாட்டை முன்னிருத்துவதாக அமைந்துள்ளன. அவற்றுள்ளும், 9 சிறுகதைகள் கணவனால் கொடுமைக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அவலத்தைப் பேசுகின்றன. ஆய்வாளர் ‘அம்மா’ எனும் ஒரு சிறுகதையக் கொண்டு பண்பாட்டுப் பெண்ணியம் எவ்வகையில் மனைவிமார்களின் எண்ணத்தையும் செயலையும் பாதிக்கின்றது என்பதனை விளக்குகிறார்.

            இறுதியாக, ‘‘மது’ நாவலில் காணப்படும் களவியல் கோட்பாடு’ தினேஷ் (மலேசியா) அவர்களின் கட்டுரை இவ்வாய்விதழில் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் தொல்காப்பியரின் களவியல் கோட்பாடு தற்கால மலேசியத் தமிழ் நாவல்களை ஆராயவும் பயன்படும் என்பது விவரிக்கப்படுகின்றது. ஆய்வின் முடிவாக, களவியலில் கூறப்பட்டுள்ள கூறுகள் யாவும் ‘மது’ எனும் மலேசியத் தமிழ் நாவலில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது அறியப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் சந்திப்பு உள்ளது, ஆயினும் முதற் கண்ணோக்கு எனும் கூறு மட்டும் இந்த நாவலில் காண இயலவில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பிய நூலில் உள்ள களவியல் எனும் கோட்பாடு இந்நவீன காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் நாவலிலும் காணப்படுகிறது என்கிறார் கட்டுரையாளர். இப்புதிய முயற்சியை ஏற்கும் வண்ணம் இக்கட்டுரையை தமிழ்ப் பேராய்வு ஆய்விதல் வெளியீடு செய்கிறது.

            மேற்குறிப்பிடப்பட்ட 10 கட்டுரைகளை ஏழாவது தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் தொகுப்பாக வெளியீடு செய்யப்படுகிறது.  பல அறிஞர்களின் சிறந்த ஆய்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ‘தமிழ்ப் பேராய்வு’, தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. பதிப்பாசிரியர் குழு இவ்வேளையில் இந்த ஏழாவது தமிழ்ப் பேராய்வு வெளியீட்டிற்கு துணை புரிந்த கட்டுரையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது. இத்தொகுப்பின் பதிப்புச் செலவை மனமுவந்து ஏற்றுக் கொண்ட அல்மா ஹெர்பல் நேச்சர் நிறுவணத்தில் தோற்றுனரும் தலைமை நிர்வாகியுமாகிய திருமிகு MGL. வேலாயுதம் அவர்களின் தாராள மனதை இவ்விடம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

 

பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன்
தலைமைப் பதிப்பாசிரியர்
24.7.2018