முகவுரை

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் எட்டாவது தொகுப்பின் முதலாவது பகுதியாகிய இவ்விதழை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு செய்கிறது. அறையாண்டிதழாக வெளியீடு காணும் இவ்விதழில் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆய்வு என்பது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாய்வேடு அதனை முன்னிருத்தி உருவாக்கம் கண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

            இந்தத் தொகுதியில் இடம்பெரும், “இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு: அடிப்படைக் காரணிகள் குறித்த ஒரு பகுப்பாய்வு”, எனும் தலைப்பிலான முதல் கட்டுரை கலாநிதி. ஆதம்வாவா சர்ஜூன்  (இலங்கை) அவர்களின் படைப்பாக அமைகின்றது. இக்கட்டுரை இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு குறித்து ஆழ்ந்து நோக்குகின்றது. இனமுரண்பாட்டின் தீவிர விளைவு மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்துக்கு வழிவிட்டிருந்தது. இனமுரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணிகளை முறையாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியையே அடைந்தன. இந்தக் கட்டுரை இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாட்டுக்கான அடையாளம் காணப்பட்ட அடிப்படைக் காரணிகளின் செல்வாக்கினை பகுப்பாய்வு செய்கிறது.

            அடுத்து வருவது, ச.கண்மணி கணேசன் (இந்தியா) அவர்களின், “மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் - ஒரு பகுப்பாய்வு”, எனும் கட்டுரை. இக்கட்டுரையானது புறநானூற்றில் இடம் பெறும் 20 மகட்பாற்காஞ்சிப் பாடல்களைப் பகுத்து ஆய்வதாக அமைகின்றது. அப்பாடல்களே முதல்நிலைத் தரவுகளாகின்றன. பிற சங்க இலக்கியப் பாடல்கள் துணை ஆதாரங்களைத் தருகின்றன. 20 பாடல்களிலும் பண்டைத் தமிழகத்தின் சமூக வரலாறு பற்றிய பல உண்மைகள் பொதிந்து உள்ளமை கூர்ந்து நோக்கின் புலனாகின்றன. பன்முகப் பாங்குடைய அச்சமூகத்தில் வேந்தர்க்கும், வேளிர்க்கும் இடையில் நிகழ்ந்த அதிகாரப் போட்டியும்; அவர்களுக்கிடையே கிழார் ஊடாடிய பங்கும் புலனாகின்றன.

            இவ்வாய்விதழில் மூன்றாவது கட்டுரை, “சுங்கை பெர்ணம் ஆற்றங்கரையில் தமிழர்களின் சுவடுகள் - நல்ல தண்ணி தோட்டம்” எனும் பாரதிஸ் தேவி சுப்ரமணியம், பொன்மலர் பன்னீர் செல்வம் மற்றும் முனைவர் சில்லாழி கந்தசாமி (மலேசியா) ஆகியோரின் கட்டுரையானது மலேசிய பேராக் மாநில சுங்கை பெர்ணம் நதிக்கரையில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு வரலாற்றச் சொல்வதாக அமைகின்றது.  இக்கட்டுரை இந்தியத் துணைக்கண்டத்திற்கும் மலாயாவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தொடக்கால பண்பாட்டுத் தொடர்புகளைத் தொட்டு, தற்போதைய மலேசிய இந்தியர்கள் இங்குக் குடியேறிய பின்புலத்தையும் சுட்டி, சுங்கை பெர்ணாம் தோட்ட மக்கள் இவ்வாறாக குடியேறியவர்களுள் ஒரு பகுதியினர் என்பதை அறிமுகப்படுத்துகிறது. இத்தோட்ட மக்களின் பண்பாட்டு வரலாற்றினை இக்கட்டுரை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறது. இதில் ‘பெர்ணாம்’ நதியின் பங்களிப்பை  இக்கட்டுரை மிகவும் தெளிவாகவும் துள்ளியமாகவும் படைத்துக் காட்டுகின்றது. இதனிடையே மலேசிய நாட்டு வளர்ச்சியில் ‘பெர்ணம்’ தோட்ட மக்களின் பங்களிப்பையும் கூட இக்கட்டுரை பேசுகிறது.

            இதனை அடுத்து வரும் முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர்) அவர்களின் கட்டுரையானது, சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து ஆய்வதாக உள்ளது. சிங்கப்பூரில் நிலவும் பன்மொழிச்சூழல் மொழிபெயர்ப்பு இலக்கியம் வளர்வதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும்,  இனநல்லிணக்கம் வளர்க்கும் வழிகளுள் ஒன்றாகவும் இம்மொழிபெயர்ப்பு இலக்கியமும் முக்கியத்துவம் பெருவதாக எழுத்தாளர் குறிப்பிடுகிறார். கவிதை, புனைக்கதை, சிறுவர் இலக்கியங்கள், கட்டுரைகள் என அனைத்து இலக்கிய வகைமைகளிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் சிங்கையில் உருவாகியுள்ளதை இக்கட்டுரை தக்க சான்றுகளுடன் முன்வைப்பது சிறப்பு.

            இவ்வாய்விதழின் அடுத்த கட்டுரை முனைவர் வி.காயத்ரி பிரியதர்ஷினி  (இந்தியா) அவர்களின், 'இராமாயணமும் எதிர் கதையாடல்களும்’ ஆகும். இராமாயணம் என்ற தொன்மக்கதை இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கக்கூடிய பொதுத்தன்மைவாய்ந்த இலக்கியமாகத் திகழ்கின்றது என்பதனை மிகவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் கட்டுரை இது. பல்வேறு வடிவங்களில் சிற்சில மாற்றங்களுடன் விளங்கும் இக்காப்பியம் தற்காலம் வரை தொடர்வாசிப்பிற்கும் மீள் புனைவாக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடிய காப்பியமாகத் திகழ்கின்றது. இவ்வாறு ஏற்பு, எதிர்ப்பு என்று சமகால இலக்கியமாகவும் திகழும் இராமாயணம் திராவிட இயக்கக் கருத்தியலை விளக்கப் பயன்பட்டதும் அவர்களின் கருத்தியல் புலப்பாட்டுத்திறன் படைப்புகளில் வெளிப்படும் முறையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

            இணைப்பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல், பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் முனியாண்டி (மலேசியா) ஆகியோரின் மலாய் மொழியில் மகாபாரதம் எனும் கட்டுரை மலாய் மொழியில் இருக்கும் மகாபாரதக் கதையை ஆழ்ந்து நோக்குவதாக அமைந்துள்ளது. இந்தியமயமாதல் அலையின் கீழ் இலக்கியங்களும் கூட தென்கிழக்காசிய மக்களிடையே பரவியமை அறிந்த ஒன்றே. அவ்வகையில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களே இவற்றுள் முதன்மை இடம் பெறுகின்றன. இவை அடிப்படையில் ஜாவா மொழியில் எழுதப்பட்டு, இஸ்லாமிய வருகைக்குப் பின்னர் மலாய் இலக்கியப் பாரம்பரியத்திற்கு வந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. இக்கட்டுரை மலாய் மொழியில் உள்ள மகாபாரதக் கதையை ஆய்ந்து விளக்குவதாக அமைந்துள்ளது.

            தொடர்ந்து வருவது முனைவர் க.சுபாஷிணி (ஜெர்மனி) அவர்களின், பண்டைய ரோமானிய அரசுடனான தமிழக வணிகத் தொடர்புகள் பற்றிய ரோமானிய ஆவணங்கள் கூறும் செய்திகள்’ எனும் கட்டுரையாகும். இக்கட்டுரை பண்டையத் தமிழகத்துடனான ரோமானிய வர்த்தகம் தொடர்பான ரோமானிய ஆவணங்களை ஆராய்கின்றது. இவ்வாவணங்களின் வழி வெளிப்படும் பண்டையத் தமிழகம் பற்றிய குறிப்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களும் குறிப்புக்களும் பண்டையத் தமிழக வணிகச் சூழலை விவரிக்கும் பாங்கை இக்கட்டுரை ஆய்கிறது. மேலும் பண்டைய ரோமானிய மற்றும் தமிழக வணிக நகரங்கள், துறைமுகங்கள், பண்டைய ரோமானிய வணிக நடைமுறைகள், வழக்கிலிருந்த வர்த்தகச் சூழல்கள், இடைத்தரகர்கள், நிலவழி மற்றும் கடல்வழி வணிகப் பாதைகள், வணிக ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட வணிகப்பொருட்கள்  பற்றியும் விவரிக்கின்றது. 

            அடுத்தது, ‘சீனி நைனா முகம்மது கவிதைகளில் திருக்குறளின் தாக்கம்’ எனும் தலைப்பிலான முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை (மலேசியா) அவர்களின் கட்டுரையாகும். இக்கட்டுரை மலேசிய கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் தேன்கூடு எனும் தலைப்பிலான மரபு கவிதை நூலில் காணக்கிடக்கும் திருக்குறளின் தாக்கத்தை உற்று நோக்குவதாக அமைந்துள்ளது. ஒப்பிலக்கிய ஆய்வில் ஒரு பகுதியாக விளங்கும் ‘தாக்கக்கோட்பாடு’ (Influence Theory) எனும் அணுகுமுறையின் அடிப்படையில், தற்காலத் தமிழிலக்கியமான தேன்கூடு கவிதைத் தொகுப்பில் சங்கமருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளின் தாக்கம், அடிக்கருத்துச் மற்றும் புனைவுநிலை சார்ந்து இக்கட்டுரை ஆய்கிறது.

            தொடர்ந்து முனைவர் ப.சு. மூவேந்தன் (இந்தியா) அவர்களின் கட்டுரையானது “திருக்குறளில் ‘தீ ’ந் திறம்” எனும் தலைப்பில் அமைந்துள்ளது. தொன்மைச் சமுதாயத்தில் தீயின் கண்டுபிடிப்பு அவர்தம் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்கள் பலவாகும். மனித சமூக வளமைக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது தீயின் பயன்பாடே. தீயைக் காட்சிப்பொருளாக மட்டுமன்றி, கருத்துப் பொருளாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். தீயின் ஆற்றல், செயல், வலிமை, மென்மை, அறிதிறன், செயல்பாடு, பயன்பாடு, வாழ்வில் முரண்பட்ட தன்மை ஆகியன முப்பால் அறங்களுக்கும் ஏற்றவாறு பொருத்தமுறக் காட்டியுள்ள திறத்தினை இக்கட்டுரையாளர் தெளிவாக ஆய்ந்து வெளிப்படுத்தியிருப்பது இக்கட்டுரையின் சிறப்பு.

            அடுத்தது ரதிதேவி சண்முகம், முனைவர் மோகனதாஸ் ராமசாமி (மலேசியா) ஆகியோரின், “திருவள்ளுவம் கூறும் கற்புநெறி வாழ்வும், தமிழ்த் திரைப்படங்கள் மலேசிய ஆண் மற்றும் பெண்களிடையே ஏற்படுத்தவல்ல கற்புநெறி மாற்றங்களும்” எனும் கட்டுரையானது, வள்ளுவத்தின் வாழ்க்கைத் துணைநலம் மற்றும் பிறனில் விழையாமை ஆகியவற்றில் கூறப்படும் ஆண், பெண்ணுக்கான கற்புநெறி ஒழுக்கத்தை, மலேசியத் தமிழ்ச் சினிமாவை முன்னிருத்தி ஆய்வு செய்கிறது. ஆய்வின் பயனாக, சினிமாவின் தாக்கத்தினால், மலேசியாவில் சில குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும்,  அதனால் விளைந்த துயரங்களையும் இக்கட்டுரை வள்ளுவத்தின் துணைகொண்டு ஆராய்கிறது.

            இத்தொகுப்பில் தொடர்ந்து வரும் கட்டுரையானது, தொல்காப்பிய மரபியல் முறைவைப்புச் செய்திகளை ஆய்வுக்குட்படுத்துவதாக உள்ளது. இக்கட்டுரையில் முனைவர் ச.இரமேஷ் (இந்தியா), மரபியலானது உலக வழக்கையும் செய்யுள்  à®µà®´à®•à¯à®•à¯ˆà®¯à¯à®®à¯ மரபு வழுவாமல் செய்யுள் இயற்றப் பயன்படுத்த வேண்டும் எனும் கருப்பொருளைத் தொட்டு எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் தொல்காப்பிய மரபியல் அஃறிணைப்பெயர்கள், உயர்திணைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள், உயிர்களின் வகைகள் ஆகியவற்றைப் பேசுவதோடு உயர்திணையான மனிதர்களிடையே  à®‡à®¯à®²à¯à®ªà®¾à®•  உள்ள  வருணாசிரம சமூகவேறுபாடுகளான அவ்வர்ணத்தாருக்குரிய உரிமைகள் குறித்துப் பேசுவதை ஆய்வுகுட்படுத்தியுள்ளார். குறிப்பாக, வருணாசிரமக் கருத்துகள் இடைச்செருகல்கள் என்று கூறப்படுவதை தக்க சான்றுகளுடன் ஆய்வாளர் மறுக்கின்றார்.

            அடுத்து வரும், “உபநிடத உரையாடலில் கருத்துமுதல்வாதத்தின் வகிபங்கு" எனும் கு. தவசீலன், கலாநிதி (திருமதி). வி.பவநேசன் (இலங்கை) ஆகியோரின் கட்டுரையானது இந்திய தத்துவ வளர்ச்சியில் அனைத்துத் தத்துவங்களுக்கும் அடிநாதமாக விளங்குவது உபநிடதமே எனும் கருத்தை முன்வைக்கிறது. கருத்துமுதல்வாதம் என்பது கருத்துக்கு முதன்மை கொடுத்து கருத்து மாத்திரம்தான் உண்மை, அனைத்திற்கும் கருத்தே அடிப்படை என்பதை நிறுவுகிறது. உபநிடத உரையாடல் வழி அமைந்த தத்துவக் கருத்துகள் அனைத்தும் எவ்வாறு கருத்துமுதல்வாதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதனை ஆதாரங்களுடன் இக்கட்டுரை முன்வைக்கிறது.

            “தமிழும் சோதிடமும்”, எனும் தலைப்பிலான திலக். கி. பாஸ்கரன், பொறியாளர் சு. சிவராம்கிருஷ்ணன் (இந்தியா) ஆகியோரின் கட்டுரையானது இத்தொகுப்பில் 13–வது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வாழ்வியல் இயற்கையை மையமாகக் கொண்டுள்ளது என்பதை மையப்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழரின் சோதிடக் கலை அறிவானது இயற்கையோடு இயைந்து மனித வாழ்வைக் காட்டும் கண்ணாடியாக அமைந்திருக்கும் திறத்தை இக்கட்டுரை ஆய்கிறது.

            தொடர்ந்து வரும், பிரேமநந்தினி தேமுடு, முனைவர் மோகனதாஸ் இராமசாமி  (மலேசியா) ஆகியோரின் கட்டுரை, மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் அரசியல் தலைமைத்துவத்தைத் திருக்குறளின் ‘அமைச்சியல்’ அதிகாரத்தின் துணைகொண்டு ஆய்கிறது. திருக்குறளின் செய்திகள் காலத்தால் முந்திதயிருப்பினும் அது தற்கால அரசியல் சிந்தனையிலும் பளிச்சிடுவதை இவ்வாய்வு விளக்கப்படுத்துகிறது.

            முனைவர் ஸ்ரீ அனுராதா அவர்களின், “திருலோக்கி” (இந்தியா) எனும் தலைப்பிலான கட்டுரை இத்தொகுப்பின் நிறைவுக் கட்டுரையாக அமைகிறது. இக்கட்டுரையில் திருலோக்கி எனும் திருத்தலத்தில் முதலாம் இரசேந்திர சோழனால் கட்டப்பட்ட கைலாசநாதர், திரைலோக்கிய சுந்தரம், ஸ்ரீராப்திசயன நாராயணப் பெருமாள் ஆகிய திருக்கோயில்கள் உட்பட சில சிறுதெய்வங்களுக்கான கோயில்களும் விவரிக்கப்படுகின்றன. இதில் முதலாம் இராசேந்திர சோழனின் பங்களிப்பும் சிறப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

            இந்த ஆய்விதல், பல்வேறு ஆய்வாளர்களின் சிந்தனைகளைத் தொகுக்கும் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. பல அறிஞர்களின் சிறந்த ஆய்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ‘தமிழ்ப் பேராய்வு’, தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. பதிப்பாசிரியர் குழு இவ்வேளையில் இந்த எட்டாவது தமிழ்ப் பேராய்வின் முதல் பகுதியின் வெளியீட்டிற்குத் துணை புரிந்த கட்டுரையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது. இத்தொகுப்பின் பதிப்புச் செலவை மனமுவந்து ஏற்றுக் கொண்ட அல்மா ஹெர்பல் நேச்சர் நிறுவணத்தில் தோற்றுனரும் தலைமை நிர்வாகியுமாகிய திருமிகு MGL. வேலாயுதம் அவர்களின் தாராள மனதை இவ்விடம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

 

பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன்
தலைமைப் பதிப்பாசிரியர்
20.07.2019